ஒவ்வொரு முறை உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர், நடைபெறும் போதும், இந்த முறையாவது இந்த அணி கோப்பையை கைப்பற்றாதா என்கிற ஏக்கம் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் வரும் என்றால், அது தென்னாப்பிரிக்கா அணியாகத்தான் இருக்கும். ஏன், மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் தங்கள் அணிக்கு அடுத்தபடியாக ஒரு அணிக்கு அதிகமாக ஆதரவு தருவார்கள் என்றால் அது தென்னாப்பிரிக்கா அணி என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு அந்த அணியின் மீது உள்ள ஈர்ப்பு, ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் அணி இவையெல்லாம்தான் அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என நல்ல டீமாக இருந்தாலும், ஏன் தென்னாப்பிரிக்கா அணி மட்டும் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி கட்டத்தை தாண்டவே முடியவில்லை என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
இதனால், தென்னாப்பிரிக்கா அணியை ஒரு சில ரசிகர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் சோக்கர்ஸ் ஆஃப் கிரிக்கெட் (Chockers of Cricket) என்று கூறுகின்றனர். அதற்குப் பொருள், நாக் அவுட், அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறாமல் எப்போதும் தோல்வி அடையும் என்று அர்த்தம்.
இன்னும் ஒரு சிலர், தென்னாப்பிரிக்கா அணி உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் அதுவும் அரையிறுதிப் போட்டியென்றால் காணமால் போய்விடுவார்கள் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து வருகின்றனர். சரி தற்போது தென்னாப்பிரிக்கா அணியின் உலகக் கோப்பை பயணம் குறித்து பார்ப்போம்.
1992 மழையும் கலைந்த கனவும்:
ஐசிசியால் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1975 முதல் நடைபெற்றுவந்தாலும், இனவெறி சர்ச்சையினால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 1992 உலகக் கோப்பை தொடரில்தான் விளையாடுவதற்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் அமைந்தது தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பைக் கனவு. முதல் தொடரிலேயே தென்னாப்பிரிக்க அணி சிறப்பாகவே விளையாடியது.
குறிப்பாக, பாகிஸ்தான் வீரர் இன்சமாம்-உல்-ஹக்கை, ஜான்டி ரோட்ஸ் ரன் அவுட் செய்த விதத்தை இப்போதும் ரசிகர்கள் வாய் பிளந்து பார்ப்பதுண்டு. தனது முதல் தொடரிலேயே தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்திறனால் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சிட்னியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இதில், 253 ரன் இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு இறுதி 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டன. அந்த நேரத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு கைவசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. அந்த முக்கியமான தருணத்தில் மழை பெய்ததால், ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்றபின், டிஎல் (டக்வொர்த் லூயிஸ்) முறைப்படி தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஒரு பந்தில் 21 ரன்கள் எடுத்தாக வேண்டும் என டிஜிட்டல் ஸ்கோர் போர்டில் காண்பிக்கப்பட்டது, தென்னாப்பிரிக்கா வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது!
இதனால், அவர்களது உலகக் கோப்பை கனவு மழையால் கலைந்தது. 1996இல் பெரிதாக ஜொலிக்கவில்லை என்றாலும், 1999 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா செய்த தவறுகளும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் அடுத்த தொகுப்பில் பார்ப்போம்.