வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 28.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தோனி கோலி உடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், தோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இதனால், இன்றைய போட்டியில் இவர் நிச்சயம் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, வழக்கம் போல் முதலில் நிதானமாக ஆடிய தோனி, கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 61 பந்துகளில் 56 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனால், இந்திய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை எடுத்தது. இதனிடையே, தோனியை 8 ரன்களில் அவுட் செய்யும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஹோப் நழுவவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீ்சசாளர் ஃபெபியன் ஆலன் வீசிய 34ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட தோனி, சிக்சர் அடிக்க முயன்று க்ரீஸை விட்டு பல ஸ்டெப்புகள் இறங்கி வந்தார். '
ஆனால், பந்தை அவர் மீட் செய்ய தவறியதால், பந்து ஷாய் ஹோப்பிடம் சென்றது. பதற்றத்தின் காரணமாக, ஹோப் தன்னிடம் வந்த பந்தை சரியாக பிடிக்காததால் தோனியை ஸ்டெம்பிங் செய்ய தவறவிட்டார். இதனால், தோனி 8 ரன்களில் அவுட் ஆவதில் இருந்து தப்பி 56 ரன்கள் அடித்தார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.