திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சுணன் (28). கூலி வேலை செய்து வந்த இவருக்கு மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மதகடி பகுதியில் வசித்துவரும் இவரது தாய்மாமன் வீட்டுக்கு அர்ச்சுணன் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது கடந்த 2017ஆம் ஆண்டு பிப்.22ஆம் தேதி தாய்மாமனது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் இருந்தபோது அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதை அறிந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அர்ச்சுணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இது தொடர்பான வழக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. அதில் அர்ச்சுணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.