இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளுக்கு நாள் கரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனை செய்யக் கோரும் உத்தரவின் பேரிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது .
இதையடுத்து, தேர்வு எழுத இருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.
அதேவேளையில் தமிழ்நாடு கல்வி பாடத்திட்டதின் கீழ் பிற மாநிலங்களில் தமிழ் வழியில் கல்வி பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுநிலை குறித்த தெளிவான அறிவிப்பு வெளியிடப்படாத காரணத்தால் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கவலையில் உள்ளனர்.
வெளிமாநிலங்களில் தமிழ்நாடு கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் தமிழ்நாடு மாணவர்களை தனித்தேர்வர்களாக அறிவித்து தேர்வு நடத்தி சான்றிதழ்களை தமிழ்நாடு கல்வித் துறை வழங்கி வருகின்றது .
இந்த சூழலில் தமிழ்நாடு கல்வித்துறை சார்பில் பிற மாநிலங்களில் பயிலும் தனித்தேர்வர்களுக்கு தனியாகத் தேர்வுகள் நடத்தத் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டத்தை கல்வித்துறை கைவிட வேண்டும். ஏனெனில், தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிலையை காட்டிலும் மிக மோசமான நிலை மகாராஷ்டிரா டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலவுகின்றது.
ஆகவே, இந்த அசாதாரண சூழலில் மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ளச் செய்வது மிகவும் ஆபத்தானது. ஆகவே, வெளிமாநிலத்தில் உள்ள தமிழ்நாடு மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் தேர்வை ரத்து செய்து தேர்ச்சி அறிவிப்பினை வெளியிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாட்டு விமானங்கள் தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ - உயர் நீதிமன்றம்