கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி திறக்கும் வரை வீட்டில் இருந்து கல்வி கற்பதற்காக தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு மற்றும் பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினியில் கல்வி பயில ஏதுவாக மென்பொருள் உருவிலான பாடங்களை பதிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பார்வையிட்டார்.
பள்ளி மாணவர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து புத்தகங்களை வாங்கிசென்றனர். பள்ளி வளாகத்தில் நுழையும்போதே வெப்பமானி கொண்டு மாணவர்கள் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, “சென்னையில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியில் அனைத்து பாடங்களையும் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மணிநேரத்திற்கு 20 மாணவர்கள் என்ற விகிதத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றி புத்தகங்கள் வழங்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.