டெல்லி: அவகாசம் வழங்கப்பட்டுள்ள காலத்தில் வாடிக்கையாளரிடத்தில் இருந்து வட்டி வசூலிக்கப்படுமா? தவணை கட்டாத மாதங்களுக்கு வேறு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியன்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொதுமுடக்கத்தால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலையிழப்பையும் ஊதிய குறைப்பையும் சந்தித்தனர்.
எனவே, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாத தவணை செலுத்த மே மாதம் வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்தது. தற்போது இந்த அவகாசம் மேலும் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த தவணைகளைச் செலுத்த அவகாசம் அளித்த ரிசர்வ் வங்கி, வட்டியைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவில்லை. இதனால், தவணைகளைச் செலுத்த முடியாத காலத்தில் வட்டித் தொகையை அசலில் சேர்ந்து, அதற்கு வட்டி போட்டு வசூலிக்கும் முடிவுகளை அறிவித்தன.
அதாவது, செய்த உதவிக்கு கைமாறாக வட்டிக்கு வட்டிப் போட்டு வங்கிகள் வசூலித்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் டெல்லியைச் சேர்ந்த கஜேந்திர சர்மா, தவணைகளுக்கான வட்டியை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “வட்டி செலுத்துவதை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு 2.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
இது, நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு விழுக்காடு ஆகும். வட்டியைத் தள்ளுபடி செய்தால், வங்கிகளில் இருப்பு வைத்துள்ளவர்களின் நலனை காக்க முடியாத நிலை ஏற்படும். ஆகவே, கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது” எனத் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவகாசம் வழங்கப்பட்டுள்ள காலத்தில் வட்டி வசூலிக்கப்படுமா? தவணை கட்டாத மாதங்களுக்கு வேறு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இதுதொடர்பாக நிதித்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கிறேன்” என்று தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், “வங்கி கடன் மாத தவணை அவகாசத்தின் போது வட்டி வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்க முடியுமா” என்பது குறித்தும் மத்திய நிதித்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.