விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இன்றும் (ஜூன் 13) நாகையிலிருந்து கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீனவர்களின் வலையில் அதிக அளவில் மத்தி மீன்கள் சிக்கியுள்ளன.
இதையடுத்து மீனவர்கள் கொண்டுவந்த மீன்களை, மீன் பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். மத்தி மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த மீன்கள் அனைத்தும் உள்ளூர்வாசிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிவந்த மத்தி மீன்கள் நீண்ட நாள்களுக்குப் பிறகு கிடைத்ததால், தற்போது கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.