வன விலங்குகள் அதிகமாக காணப்படுகின்ற ஆரல்வாய்மொழி வடக்கு மலையடிவாரப் பகுதியில் கடலை போன்ற பயிர் வகை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மலையடிவார பகுதிகளில் கடலை பயிரிடப்பட்டுள்ளது. இதனை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருவதால், அவற்றை விரட்டுவதற்காக நாட்டு வெடியினை நிலத்தில் புதைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த வழியாக வந்த இரண்டு வயது மதிக்கத்தக்க கடமான் (மிளா), கடலை பயிரை கடித்ததில் வாய் பகுதி வெடித்து சிதறியுள்ளது. ரத்தம் வழிந்தோட உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ள கடாமனை கண்ட அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி தகவலறிந்த பூதப்பாண்டி வனசரகர் திலீபன் தலைமையில் வனக் காவலர் சக்திவேல் உள்ளிட்ட வன மருத்துவ ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கால்நடை உதவி மருத்துவர் கிறிஸ்டோபால் ராய் கடமானை பரிசோதனை செய்தபோது அது இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஆரல்வாய்மொழி வன அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட இறந்த கடமானுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு, வன அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், தடைசெய்யப்பட்ட நாட்டு வெடிகளை மலையடிவாரப்பகுதியில் வைத்தது யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மலைப்பகுதியில் கடமான், நெடுங் காட்டுப்பன்றி, சிறுத்தைகள், மனிதவால் குரங்குகள், யானைகள் அறிய வகை உயிரினங்கள் காணப்படுவது கவனிக்கத்தக்கது.