சேலம் மாவட்டம் கருப்பூரில் அமைந்துள்ள சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களின் மூலம் பயனடைந்த நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கூடிய 25 லட்சம் ரூபாய் கடனுதவி பெற்று, பல்வேறு விதமான ஆணிகள், கொக்கிகள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து, வெற்றிகரமாக தொழில் நடத்திவரும் பர்பெக்ட் நெயில்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு மானியம், மின்னாக்கி மானியமாக 3 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பெற்ற பி.வி.என். பவர் லைன்ஸ் நிறுவனம், உணவுப் பொருள் பதப்படுத்தும் தொழில் நிறுவனமான ஜெயஸ்ரீ ஃபுட் புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தொழில் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன் தொழில் நிறுவனங்களுக்கான தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அந்நிறுவனங்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.