திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் செயின்பறிப்பு, ஆள்கடத்தல், வழிப்பறி போன்ற பல்வேறு சமூகவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார்.
இது தொடர்பாக, மதன்குமார் மீது பழனி தாலுகா காவல் துறையினர் பல வழக்குகள் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், மதன்குமார் தொடர்ந்து ஆள்கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் மதன்குமார் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ் விசாரணை செய்தார்.
இதன்பேரில் மதன் குமாரை கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து பழனி தாலுகா காவல் துறையினர் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டுவந்த பிரபல ரவுடியை சார் ஆட்சியர் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தவிட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.