மதுரை மாநகரில் அண்மைக்காலமாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தீவிர வாகனச் சோதனைகளை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, மதுரை கே.கே. நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே அண்ணாநகர் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நிற்காமல் சென்றனர். அவர்களை துரத்திச் சென்று பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மூவரும் வில்லாபுரம் மற்றும் மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த கண்ணராஜாபாண்டி, தவமணி, அஜித்குமார் ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் மூவரும் மதுரை அண்ணாநகர், கே.கே.நகர், தெப்பக்குளம் எஸ்.எஸ். காலனி உள்ளிட்ட காவல் நிலைய பகுதியில் சாலையில் நடந்துச் செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த அண்ணாநகர் காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 71 சவரன் நகைகளை மீட்டனர். வாகனச் சோதனையின்போது துரிதமாக செயல்பட்டு பிரபல வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடித்த காவலர்களை மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வெகுவாக பாராட்டினார்.