திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவனருள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து துறைகளையும் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலர் ஜவகர் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்து 620 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் 118 பேரில் 73 பேர் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நோய்த் தொற்று பாதித்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் 33 பேரும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் 20 பேரும், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஏழு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,939 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 1,096 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 296 பேர் சிறப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர்.