தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா (23). இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவியும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கம்பம் புதுப்பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக அவரது தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கராஜா அந்தப் பெண்ணை மறுமணம் செய்து கொண்டு தாத்தப்பன்குளம் பகுதியில் பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து மறுமணம் செய்து கொண்ட பெண்ணை தாம்பத்திய உறவுக்கு அழைத்து, அவர் வராததால் ஆத்திரமடைந்த சிங்கராஜா அந்த பெண்ணை தலையில் அடித்து சுவரில் மோதி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அப்பெண்ணின் மூன்றரை வயது குழந்தையையும் அடித்து துன்புறுத்தி உடலில் காயங்களை ஏற்படுத்தி இருவரையும் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியில் சென்று விட்டார்.
இரவு முழுதும் அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நேற்று காலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கம்பம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், இராயப்பன்பட்டி காவல் துறையினர் சிங்கராஜா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.