உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பொதுமக்கள் தங்களால் ஆன நிதியினை கரோனா நிவாரணத்திற்காக வழங்க முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தன. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற நிதியினை அரசிற்கு வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர், காவல்துறை ஆகியோர் தங்களது ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், காவல்துறையினர் தீவிரமாக பணிகள் மேற்கொள்வதால் அவர்களின் நிவாரண நிதிக்கு அளித்த ஒரு நாள் ஊதியத்தை திருப்பி தர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காவல்துறை பணியாளர்கள் வழங்கிய 8 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரத்து 286 ரூபாய் அவர்களுக்கு திருப்பி தர தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மேலும், இத்தொகையை திருப்பி அனுப்புவதை டிஜிபி உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.