தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டிஎஸ்பி கலை கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் தலைமையில், காவலர் செந்தூர் பாண்டியன், காவலர் பூவரசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்துக்கு அருகே வேன் ஒன்று நின்று கொண்டிருந்ததைக் காவல் துறையினர் கண்டனர். அப்போது வேனின் அருகே காவலர்கள் வருவதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக வேனை எடுத்துச் செல்ல முயன்றார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் வேனை மடக்கி பிடித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்மோகன் (30) என்பது தெரியவந்தது. மேலும் வேனை சோதனையிட்டபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 80 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. இவை சுமார் 4 டன் இருக்கும்.
இது குறித்து அந்த ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில் கோவில்பட்டி அருகே மணியாச்சி ஊராட்சி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கொடைக்கானலுக்கு கொண்டு செல்வதும், அங்குள்ள அரவை ஆலையில அரிசியை அரைத்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கோழி தீவனத்துக்காக அனுப்பி வைப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் வேனை பறிமுதல் செய்ததுடன், ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.