சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த பரவலை தடுக்க அலுவலர்கள், அமைச்சர்கள் தலைமையில் சிறப்பு குழு என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் நோய்த் தொற்று குறையாமல் இருந்துவருகிறது.
குறிப்பாக ராயபுரத்தில் அதிக நபர்கள் இந்த கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஜூன் 3ஆம் தேதி 3,060 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய (ஜூன் 9) நிலவரப்படி 4,023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 நாட்களில் கிட்டத்தட்ட 1000 பேர் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (ஜூன் 8) மட்டும் அதிகபட்சமாக தண்டையார்பேட்டையில் 184 நபர்களும் ராயபுரத்தில் 164 நபர்களும், கோடம்பாக்கத்தில் 108 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ராயபுரத்தில் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு சிறிய இடத்தில் அதிக மக்கள் வசித்தலே காரணம் என்றும், நெருக்கமான பகுதிகளில் இருக்கும் மக்களை சமுதாய நலக் கூடத்தில் தங்கவைத்து உணவு, மருந்துப் பொருள்கள் அளித்து வருகிறோம் என்றும் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்னண் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
ராயபுரம் - 4023 பேர்
திரு.வி.க. நகர் - 2273 பேர்
வளசரவாக்கம் - 1088 பேர்
தண்டையார்பேட்டை - 3019 பேர்
தேனாம்பேட்டை - 2646 பேர்
அம்பத்தூர் - 828 பேர்
கோடம்பாக்கம் - 2539 பேர்
திருவொற்றியூர் - 870 பேர்
அடையாறு - 1325 பேர்
அண்ணா நகர் - 2068 பேர்
மாதவரம் - 650 பேர்
மணலி - 343 பேர்
சோழிங்கநல்லூர் - 420 பேர்
பெருங்குடி - 421 பேர்
ஆலந்தூர் - 412 பேர்
என மொத்தம் 15 மண்டலங்களில் 23 ஆயிரத்து 298 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.