போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது இத்தாலியின் யுவன்டஸ் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். அமெரிக்க மாடல் அழகி காத்ரின் மேயோர்கா இவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
2009இல் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை மறைக்க ரூ. 3 கோடி தருவதாக கூறினார் எனவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காத்ரினால் வழக்கு தொடரப்பட்டது. ரொனால்டோவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக கேட்டிருந்தார் காத்ரின்.
ரொனால்டோ மீதான இந்தக் குற்றச்சாட்டு கால்பந்து விளையாட்டில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தப் புகாரை ரொனால்டோ ஆரம்பத்தில் இருந்தே மறுத்துவந்தார்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக காத்ரின் மேயோர்கா கடந்த மாதம் லாஸ்வேகாஸ் நீதிமன்றத்தில் மனு அளித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது ரொனல்டோ மீதான பாலியல் பாலத்கார வழக்கு கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காத்ரினுக்கு நிவாரண தொகை எதுவும் வழங்கப்பட்டதா? அவர் ஏன் இந்த வழக்கை திரும்பப் பெற்றார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.