டெல்லி: தலைநகரில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோயாளிகளைக் கட்டுப்படுத்த, ரயில் பெட்டிகளை நாட்டிலேயே முதல் முறையாக கரோனா மருத்துவமனையாக பயன்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது.
கரோனா நோய்க் கிருமியின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவமனைகளும், தனிமை மையங்களும் போதாத நிலை ஏற்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில் பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து கரோனா அறைகளாக மாற்றப்பட்டது.
அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். ரயில்வே சார்பில் 5,321 ரயில் பெட்டிகள் தனிமைப் பிரிவு அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. இச்சூழலில் டெல்லியில் சுமார் 20 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசின் வேண்டுகோளை ஏற்று 160 படுக்கை வசதிகளைக் கொண்ட 10 சாதாரண பெட்டிகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், குளிர்சாதன வசதியுடனான ஒரு பெட்டி மருத்துவர்கள் உள்ளிட்டோரின் ஓய்வறை பயன்பாட்டுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.