புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி ஊராட்சி செயலர் மோகன்ராஜ் என்பவர் மீது பல்வேறு புகார்கள் தெரிவித்து மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் பொதுமக்கள் புகார் மனு அனுப்பி வைத்தனர்.
அதில், நூறு நாள் வேலை திட்டத்தில் மோகன்ராஜ் ஊழல் செய்வதாகவும் பல்வேறு புகார்களைக் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து அலுவலர்கள் பஞ்சநாதன், ராணி ஆகியோர் புகார் அளித்த மக்களை நேரில் சந்தித்து அவர்களின் புகார்களை விசாரித்தனர்.
அலுவலர்கள், மனுவில் கையெழுத்திட்டது இவர்கள்தானா? புகார்கள் உண்மையா? மோகன்ராஜ் ஊழல் செய்தது உண்மையா? என்பன உள்ளிட்ட புகார்களில் குறிப்பிட்ட பல்வேறு கேள்விகளை தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களிடம் கேள்விகளாக கேட்டனர்.
புகார் செய்தவர்களை பொதுவெளியில் வைத்து கேள்வி கேட்காமல், தனியாக வைத்து விசாரித்திருந்தால் யாருக்கும் சாதகம் பாதகம் இல்லாமலும் ஒரு தலைப்பட்சமாக இல்லாமலும் இருந்திருக்கும் என்பது அங்கு வந்திருந்த மக்களின் பொதுவான கருத்தாக இருந்தது.
விசாரணைக்கு வந்திருந்த அலுவலர்கள் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு ஊராட்சி செயலர் மோகன்ராஜ் மீது, இதேபோல் வீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.