ஈரோடு மாவட்டம், முழுவதும் கடந்த சில நாள்களாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என எவ்வித வேறுபாடுகளுமின்றி பரவலாக கரோனா தொற்று ஒரே சீராகப் பரவி வருகிறது.
கடந்த 10 நாள்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தற்போது நோய்ப்பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்டம் முழுவதும் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அரசு சேவை மையத்தில் ஆதார் கார்டு திருத்தம், குடும்ப அட்டைத் திருத்தம் உள்ளிட்ட ஆவணங்களின் திருத்தத்திற்கு ஒரே நாளில் பலர் வந்திருந்தனர்.
அப்போது, தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் சேவை மையத்திற்குள் நுழைந்து, விண்ணப்பத்திருந்த ஆவணங்களின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பியதால் சேவை மைய ஊழியர்கள் எந்த வேலையையும் செய்ய முடியாமல் கடும் தடுமாற்றத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் சேவை மையத்திற்குள் நுழைய முயன்றவர்களை வலுக்கட்டாயமாக தகுந்த இடைவெளியுடன் நிற்க வைத்து ஒழுங்குபடுத்தினர்.
மேலும் பொதுமக்களிடம் மாவட்டம் முழுவதும் கரோனா நோய்ப்பரவல் அதிகரித்து வருவதால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற இடங்களில் ஆவது பொறுமையுடன் காத்திருந்து, ஒவ்வொருவராய் தங்களது பணியை முடித்துச் செல்ல வேண்டும் என்றும், இதுபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு தகுந்த இடைவெளி மிகவும் அவசியம் என்றும் அறிவுறுத்தினர்.
இதனிடையே மாவட்டம் முழுவதுமுள்ள இதுபோன்ற பாதுகாப்பில்லாத அரசு சேவை மையங்களுக்குள், மக்கள் எளிதாக நுழைய முடியாமல், தடுப்பதற்கான தடுப்புகளை அமைத்திட வேண்டும் என்றும், தகுந்த இடைவெளிக்கான மூங்கில் தடுப்புகளை அமைத்திட வேண்டுமென்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!