மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட குப்பைகளை சேகரித்து வைக்கும் இடம் உசிலம்பட்டி சாலையில் அமைந்துள்ளது. இங்கு குப்பைகளை தினந்தோறும் கொட்டி தரம் பிரிப்பது வழக்கம்.
இதில் பிரிக்கப்பட்ட குப்பைக் கழிவுகள் தவிர மற்ற கழிவுகளை அப்படியே கொட்டி தீவைத்து எரிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு எரிக்கப்படும் கழிவுகளில் மருத்துவக் கழிவுகளும் உள்ளதால் அதில் இருந்து வெளியாகும் புகையானது அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
புகை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தற்போது அப்பகுதியில் காற்று பலமாக வீசுவதால் மாவட்ட அலுவலர்கள் உடனடியாக தங்களுக்கு தீயை அணைத்து இப்பிரச்சனையை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.