பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினர் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது
மேலும், அந்த உத்தரவில் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையை பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு சலுகையை பெற அந்தந்த மாவட்டத்தில் உள்ள தாசில்தார்களிடமிருந்து வருமானம்,சொத்து சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், சொத்து, வருமான சான்றிதழ்கள் வழங்க தாசில்தாருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அதற்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எந்தக் காரணமும் குறிப்பிடாமல் சொத்து, வருமானச் சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சான்றிதழ் வழங்குவது ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது? என்பது குறித்து வரும் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.