நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஈச்சங்குடி ஊராட்சியில் உள்ள கருப்பூர் குளத்தில் குடிமராமத்து பணியில் சவுடுமண் எடுக்கப்பட்டது. இதில் விதிமுறையை மீறி குளத்தில் மண் எடுக்கப்பட்டதால் ஆழமான குளமாக கருப்பூர் குளம் மாரியதாக கிராமமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், அதே குளத்தில் மண் எடுப்பதற்கு வருவாய்துறையினர் அனுமதி வழங்கியதன் பேரில் இன்று மணல் அள்ளப்பட்டது.
விதிமுறையை மீறி குளத்தில் மணல் அள்ளப்படுவதால் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறி ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பமேரி தலைமையில் கிராமத்தினர் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே தூர்வாரிய குளங்களை மீண்டும் தூர்வாரக் கூடாது என்று ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கூறிய கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி குளம் தூர்வாரப்படாது என்று உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.