மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இரண்டு சாலைகளையும் இணைக்கும் விதமாக சுற்றுச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, அலங்காநல்லுாரைச் சேர்ந்த அம்பிகாபதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "மதுரை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி, தாதம்பட்டியிலிருந்து மதுரை - திருச்சி நெடுஞ்சாலை சிட்டம்பட்டி வரை சுற்றுச்சாலை அமைக்க 2018 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சுற்று 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 89 கி.மீ., தொலைவில் அமைக்கப்படும் என்றும் இதற்கான சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியானது.
முல்லைப் பெரியாறு பாசன நிலம், கால்வாய்கள், நீர்நிலைகள், வனப்பகுதி வழியாக சாலை அமைக்க உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவமழை தொடங்க உள்ளதால் விவசாயம் முழு வீச்சில் நடைபெறும். இந்நிலையில், நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் (தாமரைப்பட்டி முதல் வாடிப்பட்டி வரை) பணிக்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரணையின் போது நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று (ஜூன் 25) நடைபெற்றது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.