திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி உத்தரவின்பேரில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் துணை வட்டாட்சியர் கௌரிசங்கர் தலைமையிலான வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த தனியார் காலணி தொழிற்சாலைக்குச் சொந்தமான இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஊரடங்கின்போது தகுந்த இடைவெளியைப் பின்பற்றி 9 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய மினி வேன்களில் 32 பேரை ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு மினி வேன்களில் மொத்தம் 64 பேர் ஏற்றி வந்திருந்தனர். இதையடுத்து, இரண்டு மினி வேன்களையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து வாணியம்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.