கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பல இடங்களில் 144 தடை உத்தரவு, தளர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நேற்று(ஜூன்10)வரை தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அரசுப் பேருந்துகள் ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று(ஜூன்10) முதல் மதுரை மண்டலத்தில் பேருந்துகள் இயக்குவது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். நேற்று (ஜூன்10) தேனி , திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.
தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கிருமி நாசினிகள் மூலம் கைகளை சுத்திகரிக்க செய்தல், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடலின் வெப்பநிலையை கண்டறிதல் ஆகியவற்றுக்குப் பின்பே பயணிகளை பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் என அரசு விதிமுறைகள் அறிவித்துள்ளன.
ஆனால், இவை எதையும் கடைப்பிடிக்காமலேயே முகக்கவசம் மட்டும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி, பேருந்துகளில் பயணிகள் ஏற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியுமின்றி பேருந்துகளில் பயணிகள் அமர வைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.