வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் பாஷா (42).
இவர் நேற்று தன் நண்பர்களுடன் பணம் வைத்து சூதாடியதாக வேலூர் தெற்கு காவல் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு குடியாத்தம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை அவருக்கு வயிற்றுப்போக்கு, உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சிறை அலுவலர்கள் அவரை உடனடியாக மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வு அறைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம், குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.