திருவாரூர் மாவட்டம் தென்பரை, ராதாநரசிம்மபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக காவிரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் ஆறுதல் கூறினார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி கிணற்று பாசனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு, ஜூன் மாதம் துவங்கி அறுவடை பணிகள் நடைபெற்றுவருகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. ஆனால், முழுமையாக உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படாததால் கொள்முதல் நிலையங்களில் சுமார் பத்தாயிரம் வரையிலான மூட்டைகள் நெல் குவியல்களாக குவிந்துகிடக்கிறன.
விவசாயிகள் கரோனா, மின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கிடையே சிரமப்பட்டு சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் மனிகள் கண் முன்னே கொள்முதல் நிலைய வாயில்களில் நனைவதைப் பார்த்து மனமுடைந்து செய்வதறியாது திகைத்துப் போய்யுள்ளனர். இப்பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு பொறுபேற்க வேண்டும். அன்றாடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் உடனுக்குடன் கிடங்குகளுக்கு எடுத்து செல்லப்பட வாகனம் ஏற்பாடு செய்ய வேண்டும். தேவையான சாக்குகள் தட்டுபாடின்றி இருப்பு வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது நாள் ஒன்றுக்கு ஆயிரம் சிப்பங்கள் மட்டுமே கொள்முதல் செய்ய இணையதளம் மூலம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துவதில் கிராமப்புறங்களில் மின்சார தட்டுப்பாடு, போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகளால் உரிய நேரத்தில் துவங்கி முடிக்க முடியாமல் 500 முதல் 600 சிப்பங்கள் மட்டுமே பெரும்பான்மையான இடங்களில் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது.
இதை கருத்தில்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் சிப்பங்களாக கொள்முதல் எண்ணிக்கையை உயர்த்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.