”புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பதவிகளை (NRHM) ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்துப் பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் 50க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனை முன்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர். அதேபோல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.