மதுரை மாவட்டம் திருமங்கலம் திருமால் தெருவைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (30). இவர் விருதுநகர் ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்துவருகிறார்.
கடந்த 21 நாள்களாக இவர் காவல் சார்பு ஆய்வாளர் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவரை சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் மீண்டும் பணியில் அனுமதிக்கவில்லை.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுக அறிவுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 22) இரவு குடிபோதையில் காவலர் மாயக்கண்ணன் தன்னை மீண்டும் பணிக்கு அனுமதிக்கக்கூறி சார்பு ஆய்வாளர் ஜெயக்குமாரை கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்து ஜெயக்குமார் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாயக்கண்ணனை கைதுசெய்தனர்.
பின்னர் அவரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 2இல் முன்னிலைப்படுத்தினர். நீதித் துறை நடுவர் நிஷாந்தினி அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.