கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளும் நடவடிக்கையை, அண்ணா சாலை பகுதியில் இன்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஏ.கே.விஸ்வநாதன், “தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டும். மேலும் பொதுமக்கள் யாரும் இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடாது, நடந்து தான் செல்ல வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளை மீறி செல்வோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த முறை ஊரடங்கின் போது, கண்காணிப்புகள் மிகவும் கடுமையாக இருக்கும். வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்கள் உரிய பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். அதுமட்டுமின்றி தொற்று பரவும் அபாயம் இருக்கும் கடைகள் நிச்சயம் மூடப்படும்" என்று கூறியுள்ளார்.