வங்கக் கடலில் உருவாகிய ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. தென்கிழக்கு திசையில் 450 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல், ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஃபானி புயலால் பாதிக்கப்படவுள்ள மாநிலங்களுடன் தொடர்பில் இருக்க மூத்த அலுவலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.
இதில், அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மைச் செயலர், உள்துறை செயலர், வானிலை மைய அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.