தட்டச்சு, கணினி பயிற்சிப் பள்ளிகளின் சங்க மாநில தலைவர் செந்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரோனா தொற்றால் அனைத்துப் பயிற்சி மையங்களும் மூடப்பட்டன. மார்ச் 25ஆம் தேதி முதல் தட்டச்சு, கணினி பயிற்சிப் பள்ளிகளும் மூடப்பட்டன.
சுமார் பத்தாயிரம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணியைச் சார்ந்தே தங்களின் வாழ்க்கையை நடத்திவரும் நிலையில், தற்போது வரை இந்த மையங்களைத் திறப்பது தொடர்பாக எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. ஆகவே, பத்தாயிரம் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தட்டச்சு, கணினி பயிற்சிப் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பயிற்சிப் பள்ளிகள் உள்ள நிலையில், கரோனா தொற்று பரவிவருவதால் தற்போது திறக்க அனுமதிக்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், "டாஸ்மாக் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டச்சு பள்ளிகளைத் திறக்க அனுமதிக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. நிவாரணத் தொகையும் எதுவும் வழங்கப்படவில்லை. ஆகவே, தட்டச்சு பயிற்சிப் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.