கரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுரைகளை வழங்கினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும்.
சொந்த வாகனங்களில் பயணிப்பவர்கள் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும்.
தற்போது அரசு சார்பாக 60 சதவீத பயணிகள் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் ஒத்துழைப்பு அளித்து சமூகப் பொறுப்புடன் பயணிக்க வேண்டும். குறிப்பாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசங்கள் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் சானிடைசர் வைக்க வங்கி மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.