இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒட்டுமொத்த தமிழ்நாட்டு அளவிலும், சென்னையிலும் கரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த நான்கு நாள்களாகக் குறைந்துவருவது ஆறுதல் அளிக்கிறது. அதே நேரத்தில் இது கொண்டாடுவதற்கான தருணமல்ல. கரோனா ஒழிப்பில் இது மிகச்சிறிய முன்னேற்றம்தான் என்பதை மனதில் கொண்டு கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்தால் மட்டும்தான் அடுத்தக்கட்டத்துக்கு முன்னேற முடியும்.
சென்னையில் கரோனா தொற்று பரவல் அளவு சற்று குறைந்திருப்பதற்கான காரணங்களில் மிக மிக முக்கியமானது கடந்த 15 நாள்களாக சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்காகும். இதை நினைத்து மகிழ்ச்சியடையும் வேளையில், சென்னையில் கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பாதுகாப்பு விதிகளை நாம் முறையாகக் கடைபிடிக்காததுதான் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.
ஏற்கனவே, இருந்த ஊரடங்கின் பயனாக அடுத்த ஒரு வாரத்திற்குக் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டுதான் இருக்கும். இதை கரோனா ஒழிப்பில் கிடைத்த வெற்றியாகவோ அல்லது கரோனா குறைந்து வருவதாகவோ நினைத்துக் கொண்டு கட்டுப்பாடின்றி மக்கள் நடமாடத் தொடங்கினால், அது சென்னையில் கரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவுவதற்கு வழிவகுத்துவிடும்.
சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. பிற மாவட்டங்களில் அதிகரித்துவருகிறது. ஆனாலும் நிலைமை இன்னும் கட்டுக்குள்தான் உள்ளது. சென்னையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டியது ஒரே வழிமுறைகளைத் தான். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் செல்வதை முடிந்தவரைத் தவிருங்கள்.
அதேசமயம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்ல நேர்ந்தால் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், முகக்கவசத்தையும், கையுறைகளையும் தவறாமல் அணியுங்கள், சோப்பு நீரால் கைகளை 20 வினாடிகள் கழுவுங்கள், முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களைக் கடையில் நுழைய வணிகர்கள் அனுமதிக்கக் கூடாது, வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்த வேண்டும்.
மேலும் கடைகளில் வணிகர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், முகக்கவசம் அணியும்படி கட்டாயப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் கடைகளுக்கு வர மாட்டோம், நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களிடம் புகார் அளிப்போம் என்று வாடிக்கையாளர்கள் எச்சரிக்க வேண்டும். இந்த எளிமையான விதிகளை அனைவரும் கடைப்பிடித்து கரோனாவை வீழ்த்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.