புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் புதுவை சட்டப்பேரவையில் பணிபுரிந்த ஊழியர், முதலமைச்சர் அலுவலக ஊழியர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம், சட்டப்பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைக்குத் தேவையில்லாமல் பொது மக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
அதேபோன்று சட்டப் பேரவை அலுவலகத்தில் பொது மக்கள் எம்.எல்.ஏக்களைச் சந்திப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், கடந்த இரு நாள்களாக சட்டப்பேரவைக்கு வழக்கம்போல் பொதுமக்கள் வந்தவண்ணம் இருந்தனர். இதையடுத்து சட்டப்பேரவை வாயிற் கதவருகே உள்ள காவலர்கள் பொதுமக்களை உள்ளே தேவையின்றி அனுமதிப்பதைத் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை.13) சட்டப்பேரவை வாயிற் கதவருகே அருகே வந்த பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பொது மக்கள், அங்குப் பணியில் இருந்த சட்டப்பேரவை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க முடியும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை அனுமதிக்க முடியாது என்று பணியிலிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.
அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒருவர் சட்டப்பேரவை வாயிற்கதவில் செங்கலைக் கொண்டு, சுவர் எழுப்பி தடுப்பு கட்டிவிடுங்கள் எனக் கூறி தொடர்ந்து காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆபத்தை உணராமல் பொது மக்கள், பணியில் இருக்கும் எங்களுடன் தகராறில் ஈடுபட்டுவருவதாக, அங்கு பணியில் இருந்த காவலர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பணியில் இருந்த சட்டப்பேரவை தலைமைக் காவலர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொது மக்களை சமரசம் செய்ததை அடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு