தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து, கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்கள் மூலம் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் 2397.42 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். இன்று முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி முடிய 135 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அதன்படி, பாரூர் பெரிய ஏரியில் தற்போதைய நீர் இருப்பு கால்வாயில் வந்துகொண்டிருக்கும் நீர்வரத்தைக் கொண்டும், மேலும் பருவமழையை எதிர்நோக்கியும் பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 50 கன அடி வீதமும், மேற்கு பிரதான கால்வாய் மூலம் விநாடிக்கு 20 கன அடி வீதமும் என மொத்தம் விநாடிக்கு 70 கன அடி வீதம் 135 நாள்களுக்கு முதல் ஐந்து நாள்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்ட பிறகு முறை பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீர் விட்டும், நான்கு நாள்கள் மதகை மூடிவைத்தும் முதல் போக பாசனத்திற்காக இன்று (ஜூலை 2) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள ஏழு ஊராட்சிகளின் பல்வேறு கிராமங்களிலுள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 1583.75 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேற்கு பிரதான கால்வாய் மூலம் 813.67 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
இதையும் படிங்க: ஏரி, குளங்களைத் தூர்வார அரியலூர் மக்கள் கோரிக்கை!