தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கொக்கராப்பட்டியில் நடந்து முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் திமுக சார்பில் மணிமாறன் என்பவர் பஞ்சாயத்துத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில், கொக்கராப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட எருமியாம்பட்டி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் கிராம மக்கள் பஞ்சாயத்துத் தேர்தலில் மணிமாறனுக்கு வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், மணிமாறன் அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குச் செல்லும் குடிநீர் இணைப்புகளைத் துண்டிப்பதாகவும், இதனைக் தட்டிக்கேட்டால் தட்டிக்கேட்பவர்கள் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளிப்பதாகவும், மேலும் அரசு வழங்கும் எந்த நிதியையும் வாக்களிக்காத மக்களுக்கு வழங்குவதில்லை எனவும் எருமியாம்பட்டி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தனர்.
ஆனால், அரசு அலுவலர்கள் செவிசாய்க்காததால் ஆத்திரமடைந்த எருமியாம்பட்டி கிராம மக்கள் பஞ்சாயத்துத் தலைவரைக் கண்டித்து கொக்கராப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த கோபிநாதம்பட்டி காவல் துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் வாக்களிக்காத காரணத்தால் தண்ணீர் குழாய் துண்டிப்பது உண்மை என்றால் பஞ்சாயத்துத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி