இங்கிலாந்தில் 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆறாவது லீக் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ஹஃபிஸ் 84 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 349 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 21.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்திருந்தது. இந்த தருணத்தில், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூட், பட்லர் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில், நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோ ரூட் இந்தத் தொடரில் முதல் சதம் அடித்து மிரட்டினார். இதைத்தொடர்ந்து, இவ்விரு வீரர்களும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்த நிலையில், ஜோ ரூட் 107 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய பட்லரும் தன் பங்கிற்கு சதம் விளாசினார்.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில் பட்லர் 107 ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், அந்த ஓவரை வீசிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் ஒன்பது ரன்கள் மட்டும் வழங்கி மொயின் அலி, வோக்ஸ் ஆகியாரது விக்கெட்டுகளை வரிசையாக கைப்பற்றினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் மூன்று, ஷதாப் கான், முகமது அமீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, இப்போட்டியில் இங்கிலாந்து அணியை, அதுவும் அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து கம்பேக் தந்துள்ளது.