கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கு 5ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலரும் வருமானமின்றித் தவித்து வருகின்றனர். வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது போடி சட்டப்பேரவைத்தொகுதிக்குட்பட்ட 1 லட்சத்து 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க உள்ளார்.
இதன் தொடக்கவிழா போடியில் உள்ள அவரது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து போடி தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அந்தந்தப் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகளால் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதனிடையே தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் சொந்த நிதியில் இருந்து வாங்கப்பட்ட இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளை போடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்வில், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.