ஈரோடு மாவட்டம், அருகேயுள்ள சூரம்பட்டி பகுதியில் பொதுமக்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பெரும்பள்ள ஓடையின் குறுக்கே, அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் அணைக்கட்டு கட்டித் திறக்கப்பட்டது.
கீழ்பவானி பாசன கால்வாயின் கசிவு நீர் குட்டையாகவும் இந்த அணைக்கட்டு அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் இந்த அணைக்கட்டில் தண்ணீர் சேகரமாகி வருவதுடன் மழைத்தண்ணீரும் சேகரமாகி வருகின்றது.
இதில், சேகரிக்கப்படும் தண்ணீர் நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் திறந்து விடப்பட்டு அதன் மூலம் இரண்டு ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
நஞ்சை ஊத்துக்குளி கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் விவசாயிகள் கீரை, சோளம், போன்ற பயிர்கள் பயிரிடப்படுவதுடன் சில விவசாயிகள் நெற் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் இந்த அணைக்கட்டில் ஆண்டுதோறும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருவதால் அணைக்கட்டைச் சுற்றிலும் உள்ள சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூர நிலப்பரப்பிற்கு நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவை உள்ளிட்ட தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் திருப்தியான முறையில் தண்ணீர் இருப்பதால் கீழ்பவானி பாசன கால்வாய் உள்ளிட்ட அனைத்து பாசன கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், கசிவு நீர் குட்டையில் தண்ணீர் கசிந்து அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வருவதுடன் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்து அணைக்கட்டு தனது முழுக் கொள்ளளவான ஏழு அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக, அணைக்கட்டிலிருந்து நஞ்சை ஊத்துக்குளி கால்வாய்க்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்தைப் பொறுத்து வருகிற இரண்டு மாதங்களுக்கு அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 47 கன அடி தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதாகவும், திறந்து விடப்படும் தண்ணீரை பொதுமக்கள், விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.