கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் பெயரை கேட்டாலே பயப்படாத எதிரணிகளே இருக்க மாட்டார்கள். தோல்வி அடைய வேண்டிய போட்டிகளில் எதிரணி செய்யும் சிறு தவறுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெறுவதுதான் ஆஸி. அணியின் தனி ஸ்டையில்.
அதை சரியாக செய்வதில் ஆஸிக்கு நிகர் ஆஸியே. இதனால்தான் என்னவோ மற்றநாட்டு ரசிகர்களும் ஆஸி. அணியைக் கண்டு பொறமைப்படுவது மட்டுமில்லாமல், அவர்களை வெறுக்கவும் செய்வார்கள். இன்றளவும் இந்தக் கண்ணோட்டமானது தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது.
1970,80 களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் தொய்வடைந்த சமயத்தில், ஆஸ்திரேலிய அணி குறிப்பாக 1990களில் கிரிக்கெட்டில் மேலாங்கி வளர்ந்தது.
உலகக்கோப்பையில் இவர்களது ஆதிக்கம் 1999இல்தான் தொடங்கியது. பொதுவாக, தொடக்கம் நன்றாக அமைந்தால்தான் ஆதிக்கம் செய்ய முடியும். ஏனெனில்,ஆஸ்திரேலிய அணி முதல் உலகக்கோப்பையில் இறுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் நூலளவில் தோல்வி அடைந்தது கோப்பையை தவறவிட்டது. அதன்பின், 1987இல் கோப்பையை வென்றாலும், 1992 இல் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது.
இருப்பினும், மனம் தளராத ஆஸி. மீண்டும் 1996இல் இறுதிச் சுற்றுவரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லாமல் இலங்கை அணியிடம் அந்த அணி தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸி. அணி 1999இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றது. ஸ்டீவ் வாக், மார்க் வாக், ரிக்கி பாண்டிங், வார்னே, மெக்ராத் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. மேற்கூறியதைப் போலவே, தென்னாப்பிரிக்கவினர் செய்த சிறு தவறை சரியாக பயன்படுத்திய ஆஸி. இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டி 1999 ஜுன் 20 கிரிக்கெட்டின் பாரம்பரியமான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றில், பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, அப்போதைய பாகிஸ்தான் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம், இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயம் 300 ரன்களுக்கு மேல் குவித்து மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம். கோப்பையை வெல்வோம் என உறதியளித்தார்.
அவர் கூறியதைப் போலவே, இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன், லார்ட்ஸ் மைதானத்தில் (1975,1979,1983) இந்த மூன்று முறையும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணிகள்தான் சாம்பியன் பட்டம் வென்று இருந்தனர். இந்த லாஜிக் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், களத்தில் நடைபெற்றதோ அனைத்தும் தலைகீழ். 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்போம் என ஓவராக வாய்விட்ட பாகிஸ்தான் அணி, வார்னேவின் சுழலில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், 133 என்ற இலக்கை ஆஸி அணியினர் எளிதாக எட்டி இரண்டாவது முறையாக கோப்பையை தூக்கியது. ஆஸி. கிரிக்கெட்டில் உலகக்கோப்பையில் எங்கு தோல்வி அடைந்ததோ(1975 லார்ட்ஸ் ) அங்குதான் 1999இல் உலகக்கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தை தொடங்கியது.

அதன் பின் ஆஸி. அணிக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகதான் மாறியது என்று கூறினால் அது மிகையாது. தற்போது, 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆஸி. உலகக்கோப்பையில் பங்கேற்கிறது. தற்போது 1999இல் கோப்பையை வென்றதை போல், மீண்டும் வென்று கிரிக்கெட்டில் கோலோச்சி நிற்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.