இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றினைக் கையாளுவதில் செயலின்மையும் குளறுபடியும் தொடர்ந்து நீடித்துவருகின்றன. பலமுறை எடுத்துக்கூறியும் அதனைப் புரிந்து கொள்ளாத நிலை தொடர்கிறது.
கடந்த ஒன்றாம் தேதி முதல், சோதனையை அதிகப்படுத்த பலமுறை கூறியும் கேட்காததன் விளைவே இன்று மதுரை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பிரச்னை வளர்ந்து, அடுத்த கட்டத்தினை எட்டி நிற்கிறது. மதுரையில் தொற்றுப்பரவும் வேகமானது 7.9 விழுக்காடு இருப்பதைச் சுட்டிக்காட்டி அதற்கேற்ற வேகத்தில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று எழுத்துப்பூர்வமான ஆலோசனையை வழங்கியுள்ளேன்.
கடந்த 24ஆம் தேதி சிறப்புக் கண்காணிப்பு அலுவலரிடம் உடனடியாக 3500 படுக்கைகளை உருவாக்குங்கள் என்று கூறினேன்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகமாவதை முன்னிட்டு 26ஆம் தேதி முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கரோனா நல்வாழ்வு மையங்களில் 4500 படுக்கைகளை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினேன்.
ஆனால், போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டிய பணிகளில் எவ்வளவு மெத்தனம்? கடந்த சில நாள்களாக நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
கண்டறியப்பட்டவுடன் அவர்களுக்கான மருத்துவ வசதி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் உத்தரவு. ஆனால் பல மணிநேரம் அவர்கள் காத்துக் கிடக்க வேண்டிய சூழல். முறையான வழிகாட்டலும் ஏற்பாடுகளும் இல்லாத குழப்பம்.
இந்நிலையில் ஜூன் 28ஆம் தேதி தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட கோவிட் நல்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டவர்கள், எந்த அடிப்படை வசதியும் செய்துதரப்படாததால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மதியம் 200 பேருக்கு சாப்பாடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாலை கூடுதலாக சுமார் 600 பேர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஏற்பாடுகள், உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகிய எதையும் அதிகப்படுத்தவில்லை.
இதனால் மாலையிலிருந்தே பிரச்னை ஏற்பட்டு, குடிக்கத் தண்ணீர்கூட கிடைக்கவில்லை என்ற நிலையில் விரக்தியுற்ற தனுஷ்கோடி என்பவர் தற்கொலை செய்துகொள்ள இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்து, இன்று (ஜூன் 29) காலை உயிர்நீத்துள்ளார்.
உடனிருந்த எண்ணற்ற நோயாளர்கள் கடும் பதற்றத்திலும் பயத்திலும் இரவு முழுவதும் பெருஞ்சிரமத்துக்கு உள்ளாயினர். முழுக்க முழுக்க நிர்வாகப் பொறுப்பின்மையால் ஏற்பட்ட விளைவு இது. கோவிட் முகாமுக்கு கூடுதலாக 600 பேரை அனுப்பி வைக்கும்போது அதற்கான அடிப்படை வசதியை உறுதிப்படுத்தும் வேலையைக்கூட நிர்வாகம் செய்யவில்லையென்றால், அமைச்சர்கள் நாள் முழுக்க என்ன ஆய்வுக்கூட்டத்தை நடத்துகிறீர்கள், என்னதான் ஏற்பாட்டினைச் செய்கிறீர்கள்?
நிலைமையை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றால், நான் மக்களிடம் பீதியைக் கிளப்புவதாக அமைச்சர் உதயகுமார் கூறுகிறார். வழக்கு பதிவுசெய்வோம் என்கிறார்.
அமைச்சர் அவர்களே, நான் பீதியைக் கிளப்பவில்லை, நீங்கள்தான் மக்களின் உயிரைத் துச்சமென நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; எந்த ஆலோசனையையும் ஏற்க மறுக்கிறீர்கள். தனுஷ்கோடியின் மரணத்துக்கு நிர்வாகச் செயலின்மையும் பொறுப்பின்மையுமே காரணம்.
இத்தகைய துயர மரணங்கள் இத்தோடு முடிவுக்கு வர வேண்டும். கரோனா நல்வாழ்வு மையங்களை முழுவேகத்தில் தயார்படுத்துங்கள். வழக்குப் போடுவோம் என்று சொல்ல வாய்வீச்சு போதும். ஆனால் இப்பொழுது தேவை செயல். அதற்கு முயற்சி செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.