தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பூரில் உள்ள பெரும்பாலான இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறை சார்பில் திருப்பூர் காதர் பேட்டை, குமரன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெரும்பாலான பனியன் குடோன்கள் மற்றும் கடைகளில் கடையின் உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, தனி நபர் மற்றும் இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் வீதம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.