ஹைதராபாத்: ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வறிக்கையில் உடல் பருமனாக இருப்பவர்கள் கரோனா காலங்களின் தங்களின் உடல் எடை மற்றும் மன அழுதத்தை போக்க பெரும் சிரமப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவ உடல் பருமன் தொடர்பான ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், 123 எடை மேலாண்மை நோயாளிகளை ஆய்வு செய்ததாகவும், அதில் கிட்டத்தட்ட 73 விழுக்காடு நோயாளிகள் பதற்றத்தை அனுபவித்ததாகவும், 84 விழுக்காட்டினருக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அனைவருக்கும் வீட்டிலேயே இருக்கும்படி கூறப்பட்டது. இது கடுமையான உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான சிக்கல்களைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இவர்கள் கரோனா நோய் கிருமித் தொற்றுக்கு ஆளானால், தீவிர உடல் உபாதைகளுக்கு தள்ளப்படுவர்" என்று அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர் சாரா மெசியா கூறினார்.
ஆய்வறிக்கையானது ஏப்ரல் 15 முதல் மே 31ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இணைய வழியில் கேட்கப்பட்ட கேள்விகள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் சராசரி வயது 51 ஆகும். மேலும் இந்த ஆய்வில் 87 விழுக்காடு பெண்கள் கலந்துகொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், 70 விழுக்காட்டினர் எடை குறைப்பதன் இலக்குகளை அடைவதில் அதிகம் சிரமப்படுகின்றனர் எனவும், அதே நேரத்தில் 48 விழுக்காட்டினர் குறைவான நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 56 விழுக்காட்டினர் உடற்பயிற்சியில் தீவிரமில்லாமல் இருக்கின்றனர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய பாதி நோயாளிகளில் உணவு சாப்பிடும் அளவு அதிகரித்துள்ளது எனவும் 61 விழுக்காட்டினர் மன அழுதத்தால் அவதிப்படுகின்றனர் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.