ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஆண் செவிலியர்கள் கோபாலகிருஷ்ணன், மோகன் தாஸ் ஆகிய இருவருக்கு திருவாடானை, ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து 30க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செவிலியர் ஒருவர் கூறுகையில், "காரோனா வார்டில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு கடந்த வாரம் வழங்கப்பட்ட உணவு சரியில்லாததால் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் செவிலியர்களுக்கு தரமான முகக் கவசம் தொடர்ந்து வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில மருத்துவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் தற்போது வரை ஆறு மருத்துவ பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக செவிலியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து புகார் கடிதம் எழுதி அனுப்புவதற்கு கோபாலகிருஷ்ணன், மோகன் தாஸ் ஆகியோர் முதன்மையாக இருந்ததால், அவர்களை திடீரென நேற்று (ஜூலை 9) திருவாடனை, ராமேஸ்வரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 240க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களை கரோனா சிகிச்சை வார்டு இல்லாத பகுதிகளுக்கு மாற்ற என்ன காரணம், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இவர்களை அந்த பகுதிகளுக்கு மாற்றக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து நாங்கள் தற்போது போராடி வருகிறோம். இது தவிர அனைத்து வார்டிலும் குறிப்பிட்ட அளவு செவிலியர்கள் நோயாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்" என்றார்.