உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நாடு தழுவிய முழுமையான ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ளன. இந்த ஊரடங்கு காரணமாக சமூகத்தின் அனைத்து பிரிவினரும் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர். தொழிற்துறை, விவசாயத்துறை என அனைத்துத் துறைகளையும் அசைத்துப் பார்த்துவிட்டது.
குறிப்பாக, கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவர்களின் வாழ்வும் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆண்டுதோறும் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கேம்பஸ் இன்டர்வியூக்களின் (வளாக நேர்காணல்) மூலம் கிடைக்கும் பணிக்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருப்பர். அப்படி கிடைக்கப்பெற்ற பணியில் வரும் வருவாயை வைத்து தங்களது பெற்றோரின் பொருளாதாரச் சுமைகளை குறைக்க நினைத்திருந்த ஏழை எளிய பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பும் ஊரடங்கும் தலை மேல் இடியாய் இறங்கியுள்ளது.
ஆண்டுதோறும் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடத் துறைகளில் பட்டப்படிப்பு முடிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அந்தந்த பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் கலந்துகொண்டு தங்களது லட்சிய கனவுப் பணிகளை பெற்றுவந்த நிலையில் இந்த ஆண்டில் அது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் தாக்கம் அடுத்த ஆண்டும் தொடரும் என்று கூறப்படுகிறது. இது மாணவர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறுகையில், "மாணவர்கள் தங்களது கனவுப் பணிகளுக்கான கேம்பஸ் இன்டர்வியூக்கள் இந்த ஆண்டில் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டிலும் நடைபெறுமா ? என்ற கேள்வியும் பொருளாதார மந்த நிலையும் தொடர்கிறது என்பது உண்மை தான். ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வேலை கொடுக்கும் பெரும் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக முடங்கியுள்ளன. சேவைத் துறை பணிகள் முடக்கம், பொதுத்துறை நிறுவனங்கள் பாதிப்பு என பெரிய அளவில் பாதிப்புகள் நாடு முழுவதும் நிலவி வருகிறது.
இதனால், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த நிலை நிச்சயமாக மாறும். வேலைவாய்ப்புகளுக்கான சூழல் நிச்சயமாக சர்வதேச மீட்சியின் அடிப்படையில் மாறும்.தற்போதைய சூழலில், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் கரோனா நோய் பரவல் ஏன் அதிகரிக்கிறது? அதனை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? இத்தகைய பேரிடர் சமயங்களில் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எது உதவியாக இருக்கும் ? உலக நாடுகள் எவ்வாறு இத்தொற்றை கட்டுப்படுத்தின ? என்பது போன்ற பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதலாம்.
இவற்றை வைத்து தற்போது உள்ள நிலை மாறி கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடக்கும் போது ஊரடங்கு காலத்திலும் நாங்கள் முடங்கவில்லை மாறாக எங்கள் அறிவிற்கு வேலை கொடுத்து இவற்றை செய்தோம் எனக் காட்டும் போது, அதுவே அவர்களது திறமைக்கும் அறிவுக்கும் சாட்சியாக இருப்பதுடன் வேலைகள் கிடைப்பதற்கும் உதவி புரியும். மாணவர்கள் மனம் தளராமல் இவற்றை செய்தல் வேண்டும்" என்கிறார்.
கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன, தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன, ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாது என்பது போன்ற குழப்பங்களை தூக்கியெறிந்துவிட்டு, இந்த தடையையும் வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாக மாற்ற மாணவர்கள் முன் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.