தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான தாபா உணவகத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர், உடலில் காயங்களுடன் உயிரிழந்திருப்பதாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாலக்கோடு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்த நபர், பாலக்கோடு கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த மாது (45) லாரி ஓட்டுநர் என தெரியவந்துள்ளது. மேலும், இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளதும், நேற்று தாபா உணவகத்தில் மாது தன் நண்பர்களுடன் மது அருந்தியதும் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த லாரி ஓட்டுநர் உடன் மது அருந்திய இரண்டு நண்பர்களில் ஒருவர் காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.