தமிழ்நாடு முழுவதும் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவும் முகக்கவசம் அணிவது ஈரோடு மாவட்டம் முழுவதும் வெகுவாகக் குறைந்தது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொற்று குறித்த ஆபத்துகளை உணராமல் முகக்கவசமின்றி வாகனங்களில் செல்பவர்கள், சாலைகளில் நடமாடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து மக்கள் நடமாடும் பொது இடங்களில் முகக்கவசமின்றி நடந்து செல்வோர் மீதும், வாகனங்களில் செல்வோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதேபோல், ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள நாச்சியப்பா வீதியில் முகக்கவசம் அணியாமல் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களை இயக்குவோரைத் தடுத்து நிறுத்திய மாநகராட்சி ஊழியர்கள், அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், காவல் துறையினர் வேகமாக வாகனங்களை இயக்கிச் செல்வோரைத் தடுத்து நிறுத்தி மாநகராட்சி அலுவலர்கள் வசம் அனுப்பி வைத்தனர். மாவட்டம் முழுவதும் தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.