நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் பகுதியில் இருந்து கிராவல் மண் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரி தூசூர் ஏரியை அடுத்த செம்பாமேடு பகுதியில் சாலை வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் நாமக்கல்லில் இருந்து அலங்காநத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற கதிர்வேல், சுப்பிரமணி ஆகியோர் மீது கவிழ்ந்தது.
இதில் லாரிக்கு அடியில் சிக்கி கதிர்வேல், சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த நாமக்கல் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி இச்சம்பவம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த கதிர்வேல், சுப்பரமணியம் ஆகியோர் நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில் தச்சு வேலை செய்து வருபவர்கள் என்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.